செய்திகள்

காஞ்சீபுரம் சோமஸ்கந்தர் சிலையில் தங்கம் மோசடி: சிலை செய்த ஸ்தபதி திடீர் தலைமறைவு

Published On 2018-01-29 09:14 GMT   |   Update On 2018-01-29 09:14 GMT
காஞ்சீபுரம் சோமஸ்கந்தர் சிலையில் தங்கம் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து சிலை செய்த ஸ்தபதி முத்தையா தற்போது தலைமறைவு ஆகி உள்ளார்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ் கந்தர் சிதிலமடைந்ததால் புதிய சிலை செய்யப்பட்டது.

இந்த சிலை செய்ததில் 4.75 கிலோ தங்கம் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதிகாரிகள் நவீன கருவியை வைத்து சிலையை ஆய்வு செய்ததில் கடுகளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முருகேசனிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சுமார் 5மணி நேரத்துக்கும் மேலாக கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டார்.

மேலும் சிலையை செய்த ஸ்தபதி முத்தையா ஸ்தானிகர் ராஜப்பா மற்றும் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கர், பரத்குமார், வினோத்குமார் உள்ளிட்டோரிடமும் அதிரடி விசாரணை நடந்தது.

இதற்கிடையே சிலை செய்த ஸ்தபதி முத்தையா தற்போது தலைமறைவு ஆகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். முத்தையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மேலும் பல சிலைகளும் காணாமல் போய் உள்ளதாகவும் தவறு செய்தவர்களை கண்டு பிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஸ்தபதி முத்தையா தலைமறைவான சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #tamilnews

Tags:    

Similar News