பள்ளி குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பு - போலீசார் விசாரணை
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு, வழியான்செட்டிகட்டளை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு மாணவ-மாணவிகளின் குடிநீர் வசதிக்காக பள்ளி வளாகத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் நேற்று காலை தண்ணீர் குடிப்பதற்காக சென்றனர். அப்போது ஒருவித துர்நாற்றத்துடன், நிறம் மாறிய நிலையில் தண்ணீர் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். பின்னர் ஆசிரியர்கள், கரியாப்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக அந்த பள்ளிக்கு விரைந்து சென்று குடிநீர் தொட்டியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம கும்பல், குடிநீர் தொட்டியில் விஷத்தை கலந்து இருப்பது தெரிய வந்தது. உடனடியாக வேதாரண்யத்தில் இருந்து டாக்டர்கள் குழு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த குடிநீரை பரிசோதனை செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிநீர் தொட்டியில் விஷத்தை கலந்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்புக்குள்ளானது. #tamilnews