செய்திகள்
நிலஅதிர்வு ஏற்பட்ட இடங்களில் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்ட இடங்களில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2017-12-28 09:47 GMT   |   Update On 2017-12-28 09:47 GMT
நிலஅதிர்வு குறித்து தகவலறிந்த செங்கோட்டை தாசில்தார் செல்வக்குமார், பண்பொழி வருவாய் ஆய்வாளர் பாக்கிய லெட்சுமி மற்றும் அதிகாரிகள் வடகரை பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.

செங்கோட்டை:

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை, பண்பொழி, அச்சன்புதூர், புளியரை, வடகரை, லாலா குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் மேற்குதொடர்ச்சி மலையடிவார பகுதிகளாகும். இதில் வடகரை, அச்சன்புதூர், மேக்கரை பகுதிகளில் நேற்றிரவு 8.45 மணியளவில் திடீரென நிலஅதிர்வு ஏற்பட்டது.

சுமார் 10 விநாடிகள் வரை உணரப்பட்ட இந்த நிலஅதிர்வால் வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன.

சில வீடுகளில் பரணில் வைத்திருந்த பொருட்கள் கீழே விழுந்தன. அந்த சமயத்தில் அப்பகுதி முழுவதும் இடி இடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டதால் வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் பீதியுடன் நின்று கொண்டிருந்தனர். மீண்டும் நிலஅதிர்வு ஏற்படலாம் என்ற அச்சத்தில் அவர்கள் விடிய, விடிய வீடுகளுக்குள் செல்லாமல் கடும் குளிரிலும் தெருக்களிலேயே ஒருவித அச்சத்துடன் அமர்ந்திருந்தனர்.

இதே போல் தென்காசி அருகே உள்ள மேலகரம் மற்றும் சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை பகுதியிலும் இரவு 8.50 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறி அங்குள்ள சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் அச்சன்கோவில், ஆரியங்காவு, கழுதுருட்டி, தென்மலை அணைப்பகுதி, புனலூர், பத்தினம்திட்டா ஆகிய இடங்களிலும் நிலஅதிர்வு காணப்பட்டது. நிலஅதிர்வு குறித்து தகவலறிந்த செங்கோட்டை தாசில்தார் செல்வக்குமார், பண்பொழி வருவாய் ஆய்வாளர் பாக்கிய லெட்சுமி மற்றும் அதிகாரிகள் வடகரை பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மேலும் அவர்கள் நிலஅதிர்வு குறித்து அச்சமடைய தேவையில்லை என பொதுமக்களிடம் கூறினர்.

இந்த நிலஅதிர்வு குறித்து வடகரை பகுதி பொதுமக்கள் கூறுகையில் நாங்கள் எங்களின் வீடுகளில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தோம். இரவு 9 மணியளவில் திடீரென பயங்கரமான இடிமுழக்கம் போல் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் வீடுகளில் லேசான அதிர்வு ஏற்பட்டது. இதனால் நாங்கள் நிலநடுக்கம் வந்து விட்டதோ என பயந்து வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்து விட்டோம். இந்த நிலஅதிர்வு ஒருசில நிமிடங்கள் நீடித்தது என்றனர்.


Tags:    

Similar News