செய்திகள்

அமைந்தகரை மார்க்கெட்டில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய கொள்ளையன்

Published On 2017-12-18 12:43 IST   |   Update On 2017-12-18 12:43:00 IST
அமைந்தகரை மார்க்கெட்டில் கொள்ளையனை பிடிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டரை கொள்ளையன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போரூர்:

திருமங்கலம் பாடிகுப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவன் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு, நகை பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

அமைந்தகரை, அரும்பாக்கம் பகுதியில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அமைந்தகரை மார்க்கெட்டில் மணிகண்டன் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இன்று அதிகாலை 1 மணி அளவில் அமைந்தகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது இருளில் பதுங்கி இருந்த மணிகண்டனை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் பிடிக்க முயன்றார். உடனே அவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனின் வலது கை, தோளில் குத்தினார். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. வலியால் அவர் அலறி துடித்தார்.

இதனை பயன்படுத்தி மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். உஷாரான உடன் வந்த போலீசார் அவனை விரட்டி பிடித்தனர். உடனே மணிகண்டன் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான்.

அதிர்ச்சி அடைந்த போலீசார் மணிகண்டனையும், சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசனையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மணிகண்டனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ராஜஸ்தானில் கொள்ளையனை பிடிக்க சென்றபோது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவற்குள் மீண்டும் சப்-இன்ஸ்பெக்டரை கொள்ளையன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News