செய்திகள்

மதுராந்தகம் அருகே ஆஸ்பத்திரி நடத்திய போலி டாக்டர்கள் 2 பேர் கைது

Published On 2017-11-16 10:20 IST   |   Update On 2017-11-16 10:20:00 IST
மதுராந்தகம் அருகே மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுராந்தகம்:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய் மிரட்டி வருகிறது. போலி டாக்டர்களிடம் காய்ச்சல் பாதித்தவர்கள் சிகிச்சை பெறுவதால் உயிர் இழப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலி டாக்டர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் சிக்கும் சம்பவம் தொடர்கிறது.

மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூரில் போலி டாக்டர்கள் ஆஸ்பத்திரி நடத்துவதாக காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுந்தர்ராஜ் தலைமையில் அதிகாரிகள் மாமண்டூரில் இயங்கி வந்த சக்தி வினாயகா கிளினீக்கில் ஆய்வு செய்தனர்.

அப்போது செங்கல்பட்டைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. அவர் பிளஸ்-2 மட்டும் படித்து இருந்தார்.

அவரை படாளம் போலீசார் கைது செய்தனர். கிளினிக்கில் இருந்த ஏரளமான மாத்திரைகள், மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல அச்சரப்பாக்கம் அடுத்த எலப்பாக்கம் கிராமத்தில் 10-ம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு தீபம் கிளினிக் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்த காண்டீபன் சிக்கினார்.

அவரை ஒரத்தி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அச்சரப்பாக்கத்தை அடுத்த கடமலைபுத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தனர்.

அப்போது ஆஸ்பத்திரி நடத்திய கருங்குழியைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பது தெரிந்தது. அவர் லேப்-டெக்னீசியன் படித்து உள்ளார்.

ஆஸ்பத்திரிக்கு அதிகாரிகள் வந்தபோது போலி டாக்டர் பாண்டுரங்கன் அங்கு இல்லை. இதையடுத்து அவரது வீட்டுக்கு அவர்கள் சென்றனர்.

சுகாதார அதிகாரிகள் வீட்டுக்கு வருவதை கண்டதும் அங்கிருந்த பாண்டுரங்கன் சுவர் ஏறிக்குதித்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News