செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் ‘மாலா’ இறந்தது

Published On 2017-11-16 08:18 IST   |   Update On 2017-11-16 08:19:00 IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்க குட்டியை இறந்த நிலையில் ஈன்ற, பெண் சிங்கம் ‘மாலா’ கர்ப்பப்பை கிழிந்ததால் பரிதாபமாக இறந்தது.
வண்டலூர்:

வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தற்போது 15 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ‘மாலா’ என்ற 6 வயது பெண் சிங்கம், கடந்த 13-ந் தேதி காலை ஆண் சிங்ககுட்டி ஒன்றை இறந்த நிலையில் ஈன்றது.

பிரசவத்துக்கு பிறகு பெண் சிங்கம் ‘மாலா’வை பூங்கா மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அதனுடைய கர்ப்பப்பை கிழிந்து போனது தெரியவந்தது. அதன் காரணமாக நேற்று காலை 8.30 மணிக்கு பெண் சிங்கம் ‘மாலா’ பரிதாபமாக இறந்தது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து பூங்கா உயர் அதிகாரியிடம் கேட்டபோது:-

பெண் சிங்கம் ‘மாலா’வுக்கு கடந்த 13-ந் தேதி காலை 9.30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதற்கு சிங்க குட்டி பிறக்கும்போது தலை முதலில் வருவதற்கு மாறாக, கால்கள் முதலில் வெளியே வந்தன. இதனால் சிங்க குட்டி இறந்த நிலையில் பிறந்தது. அப்படி கால்கள் வெளியே வரும்போது தாய் சிங்கம் ‘மாலா’வின் கர்ப்பப்பை அதிக அளவில் கிழிந்துவிட்டது.

இதன் காரணமாக ‘மாலா’வின் உடல் நிலை மோசம் அடைந்தது. ஆனாலும் பூங்கா மருத்துவமனையில் அதற்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் பெண் சிங்கத்தின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

பிரேதபரிசோதனைக்கு பிறகு ‘மாலா’வின் உடல் பூங்கா வளாகத்தில் புதைக்கப்பட்டது. இறந்து போன அந்த பெண் சிங்கம், வண்டலூர் உயிரியல் பூங்காவிலேயே பிறந்ததாகும். தற்போது பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்து உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News