செய்திகள்

உத்திரமேரூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்

Published On 2017-11-15 12:34 IST   |   Update On 2017-11-15 12:34:00 IST
உத்திரமேரூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மரணம் அடைந்த செய்து அறிந்து மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

காஞ்சீபுரம்:

உத்திரமேரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நரசிம்ம பல்லவன் (வயது 71). இவர் குடும்பத்துடன் உத்திரமேரூரில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு நரசிம்மபல்லவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நரசிம்மபல்லவன் மரணம் அடைந்தார்.

அவருக்கு சூடாமணி என்ற மனைவியும் 4 மகள்களும் உள்ளனர்.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 1984-ம் ஆண்டு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்தார்.

1987-ல் அதிமுக ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணிகளாக பிளவு பட்டபோது ஜெயலலிதா அணி சார்பில் அவர் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

மரணம் அடைந்த நரசிம்ம பல்லவனின் உடல் அவரது சொந்த ஊரான உத்திரமேரூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத். பா. கணேசன், மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

Similar News