பூம்புகார் பகுதியில் மழை வெள்ள பாதிப்புக்கு பொதுப்பணித்துறையே காரணம்: ஜி.கே.வாசன்
தரங்கம்பாடி, நவ.9-
தொடர் கனமழையால் நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வீடுகளை தேசப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை 9 முகாம்களில் வருவாய் துறையினர் தங்கவைத்துள்ளனர். பல ஆயிரம் எக்டேர் நிலங்களில் நெற்பயிர்கள் மூழ்கி அழுகியுள்ளது.
இதனை த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் பார்வையிட்டார். பூம்புகார் தொகுதி ஆறுபாதியில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளையும், நிலங்களையும் பார்வையிட்டார். பொறையார் பணிமனையில் கட்டிடம் இடிந்து அண்ணன், தம்பிகள் இருவர் உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். ஆக்கூர் வடிக்கால் வாய்க்கால், கோவில் உடையார் பத்து ஊராட்சி, தலைச்சங்காட்டில் ராஜேந்திரன் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு வீடுகள், வயல்களில் நீரால் சூழப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் 35 வருடங்களாக தூர் வாரப்படாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் விவசாயிகளும், மீனவ மக்களும், ஏழை மக்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இதற்கு முக்கிய துறையான பொதுப்பணித் துறையே பொறுப்பேற்க வேண்டும். ஆறுகள், வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாமல், நாணல்கள், வெங்காய தாமரைகள், ஆக்கிரமிப்புகள், மண் திட்டுகள் என உள்ளது. தூர்வாரப்பட்டி இருந்தால் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. தமிழக அரசு உடனடியாக வீடுகளை இழந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு முதற்கட்டமாக ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நாகை வடக்கு மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.