செய்திகள்
மரக்கடையில் எரிந்த தீயை அணைக்கும் வீரர்.

நாகர்கோவிலில் அதிகாலை மரக்கடையில் பயங்கர தீ விபத்து - தீயை அணைக்க வீரர்கள் கடும் போராட்டம்

Published On 2017-11-02 05:53 GMT   |   Update On 2017-11-02 05:53 GMT
நாகர்கோவிலில் இன்று அதிகாலை மரக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் செட்டிக்குளத்தை அடுத்த கணபதி நகரைச் சேர்ந்தவர் செபாஸ்டின் (வயது 35). கோட்டார், வைத்தியநாதபுரம் பகுதியில் செபாஸ்டின் மரக்கடை நடத்தி வருகிறார். இங்கு விதவிதமான மரங்கள் மூலம் வீடுகளுக்கு தேவையான கதவு, ஜன்னல்கள் மற்றும் பீரோ, மேஜை போன்ற பொருட்கள் செய்து கொடுக்கப்படுகிறது.

மேலும் பழைய மரச்சாமான்கள் புதுப்பித்தும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏராளமான மரப்பொருட்கள் இக்கடையில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

செபாஸ்டின் தினமும் காலையில் கடை திறந்து விட்டு மாலையில் அதனை அடைத்துச் செல்வது வழக்கம். நேற்றும் இதுபோல பணி முடிந்ததும் ஊழியர்கள் சென்று விட்டனர். அதன் பிறகு செபாஸ்டின் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இன்று அதிகாலை மரக்கடை அருகில் உள்ளவர்கள் செபாஸ்டினுக்கு போன் செய்து அவரது கடையில் இருந்து கரும்புகை வருவதாக கூறினர். அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக கடைக்கு ஓடிச்சென்றார். அப்போது கடையின் பின்பகுதியில் இருந்து கிளம்பிய புகை, சற்று நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்தது.

அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென கடையின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சற்று நேரத்தில் கடையில் இருந்த மரப் பொருட்கள் மீது தீ பரவி பிடித்தது.

இதுபற்றி செபாஸ்டின் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அங்கிருந்து மாவட்ட அதிகாரி கல்யாண் குமார், நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர். அவர்கள் மரக்கடையில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் கடைக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் மரச்சாமான்கள் என்பதால் தீ வேகமாக பரவியது. மேலும் கரும்புகையும் கிளம்பி அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது.

மேலும் தீயை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவியது. இதையடுத்து கன்னியாகுமரி மற்றும் தக்கலையில் இருந்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அவர்கள் தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டன.

தீ விபத்து அதிகாலை நேரத்தில் நடந்ததால் அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்கள் அப்பகுதியில் பரவிய புகை மூட்டத்தால் மூச்சு திணறி வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.


மரக்கடையின் அருகில் வசித்தவர்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய காட்சி.

அப்போதுதான் மரக்கடை தீப்பிடித்து எரியும் காட்சியை கண்டனர். தீ பக்கத்து வீடுகளுக்கும் பரவி விடும் என்று அஞ்சிய அவர்கள், வீடுகளில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

மரக்கடை தீப்பிடித்து எரியும் தகவல் அறிந்து கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் மரக்கடையையொட்டி உள்ள குடியிருப்புகளில் வசித்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் தீயணைப்பு வாகனங்கள் மரக்கடைக்குள் சென்று வர வழி ஏற்படுத்தி கொடுத்தனர். தீ விபத்தால் அக்கம் பக்கத்தினருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய தீயணைப்பு பணி காலை 10 மணி வரை நீடித்தது. இந்த விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கலாம்? என தெரிகிறது.

தீ விபத்துக்கான காரணம் என்ன? என்றும் கோட்டார் போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில் மரக்கடை அமைந்திருந்த பகுதியில் நேற்று இரவு முதல் அதிக வோல்டேஜில் மின்சாரம் ஏறி, இறங்கியபடி இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதிகாலை நேரத்தில் மரக்கடை அருகே இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகே மரக்கடையில் இருந்து கரும் புகை வெளி வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து மின்சார கசிவால் விபத்து ஏற்பட்டதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதோடு நாசவேலை காரணமாக மரக்கடைக்கு தீ வைக்கப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

இதற்கிடையே தொகுதி எம்.எல்.ஏ.யும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான சுரேஷ்ராஜன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மரக்கடை அருகில் குடியிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியை முடுக்கி விட்டனர்.

மேலும் தீ விபத்து நடந்த மரக்கடையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.




Tags:    

Similar News