செய்திகள்

பட்டாபிராமில் ரூ.52 கோடியில் ரெயில்வே மேம்பாலம்: அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டார்

Published On 2017-10-30 03:19 GMT   |   Update On 2017-10-30 03:19 GMT
பட்டாபிராம் பகுதியில் ரூ.52 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் கட்ட உள்ள இடம், மாற்றுப்பாதை அமைக்க உள்ள இடம் ஆகியவற்றை ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாண்டியராஜன் நேற்று பார்வையிட்டார்.
ஆவடி:

ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் சென்னை-திருப்பதி செல்லும் சி.டி.எச். சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. மிலிட்டரி சைடிங் செல்லும் ரெயில்கள் வரும்போது இந்த ரெயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்படுவதால் அந்த நேரத்தில் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சில நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் ரெயில்வே கேட்டில் மோதி சேதப்படுத்தினாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அந்த பகுதியில் ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. பாண்டியராஜன் முயற்சியில் ரூ.52.11 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் தொடங்க இருக்கும் நிலையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட உள்ள இடம், இதையொட்டி வாகனங்கள் செல்வதற்காக மாற்றுப்பாதை அமைக்க உள்ள இடம் ஆகியவற்றை ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாண்டியராஜன் நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவரிடம் அதிகாரிகள் வரைபடத்தை காண்பித்து விளக்கினர். 18 மாதத்தில் இந்த ரெயில்வே மேம்பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். அவருடன் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜதுரை, உதவி கோட்ட பொறியாளர் நாராயணன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், ஆவடி தாசில்தார் மதன் குப்புராஜ், போக்குவரத்து உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News