செய்திகள்

கடலூரில் இன்று வீட்டில் இருந்த பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சி

Published On 2017-10-27 17:06 IST   |   Update On 2017-10-27 17:06:00 IST
கடலூரில் தனியாக இருந்த பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:

கடலூர் புதுப்பாளையம் ஆர்.பி.நகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 58). இவர் தனது கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இன்று அதிகாலை ஜெயலட்சுமி வீட்டுக்கு ஒரு வாலிபர் குடிபோதையில் வந்தார். அவர் வீட்டில் தனியாக இருந்த ஜெயலட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டார். இதையடுத்து அந்த வாலிபர் ஜெயலட்சுமியை துணியால் கழுத்தை இறுக்கினார்.

பின்னர் வீட்டில் இருந்த விளக்கை எடுத்து ஜெயலட்சுமியின் கன்னத்தில் குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

காயம் அடைந்த ஜெயலட்சுமி வலியால் துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து கடலூர் புதுநகர் போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால், சம்பவ நடந்த இடத்துக்கு போலீசார் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர்.

அவர்கள் புதுநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் புதுவை-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை கைது செய்ய கோரி கோ‌ஷமிட்டனர். பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறியதாவது:-

தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய மர்ம வாலிபர் முயன்றுள்ளார். அந்த வாலிபரை உடனே கைது செய்ய வேண்டும்.

மேலும் எங்கள் பகுதியில் கஞ்சா, சாராயம் போன்றவை அதிக அளவில் விற்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீசார் அவர்களிடம் சம்பந்தப்பட்ட வாலிபர் யார்? என்று விசாரணை நடத்தி உடனே கைது செய்வோம். மேலும் கஞ்சா, சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இதை ஏற்றுக்கொண்ட மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தனியாக இருந்த பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News