செய்திகள்

ராமநத்தம் அருகே மரத்தின் மீது கார் மோதல்: 7 பேர் பலி

Published On 2017-10-19 06:43 GMT   |   Update On 2017-10-19 06:43 GMT
ராமநத்தம் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர். காரை ஓட்டியவர் தூங்கியதால் இந்த கோர விபத்து நடந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
பெண்ணாடம்:

கேரளா மாநிலம் பத்தினந்திட்டா மாவட்டம் ஆனிக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34).

இவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரியா (32). இவரும் அதே ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்கள் சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வந்தார்கள்.

இந்த நிலையில் கேரளாவில் நடக்கும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரகாஷ் முடிவு செய்தார். அதன்படி பிரகாஷ் தனது மனைவி பிரியா, உறவினர் பிரதீப் (32), பிரீத்தி (23), ஜோஷி (24) சிவா (27), குட்டி (25) மற்றும் மிதுன் (27) ஆகியோருடன் சென்னையில் இருந்து கேரளாவிற்கு வாடகை காரில் புறப்பட்டார்.

காரை பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் மாறி மாறி ஓட்டி வந்தனர். நேற்று அதிகாலை கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த எழுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுக்குள் சிக்கி பிரகாஷ், அவரது மனைவி பிரியா, உறவினர்கள் பிரதீப், ஜோஷி, சிவா, குட்டி, மிதுன் ஆகிய 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பிரீத்தி மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாண்டியன், ஈஸ்வரன், ராமநத்தம் இன்ஸ்பெக்டர் சுதாகர், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜா, மற்றும் போலீசார், திட்டக்குடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த பிரீத்தியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான 7 பேரின் உடலையும் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் காரில் இருந்து வெளியே எடுத்தனர். பின்னர் அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மற்றும் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரை ஓட்டியவர் தூங்கியதால் இந்த கோர விபத்து நடந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


 காரின் இடிபாடுக்குள் சிக்கியவர்களை போலீசார் மீட்கும் காட்சி

மரத்தில் மோதி கார் அப்பளம்போல் நொறுங்கியது.

Tags:    

Similar News