செய்திகள்

வண்டலூர் பூங்காவில் சிங்க குட்டிக்கு ‘விஷ்ணு’ என்று எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்

Published On 2017-10-12 14:10 IST   |   Update On 2017-10-12 14:10:00 IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ரூ.7.13 கோடி செலவில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் பூங்காவில் உள்ள 7 மாத ஆண் சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என்று பெயர் சூட்டினார்.
தாம்பரம்:

வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே புதிதாக உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் கட்டப்பட்டு உள்ளது.

ரூ.7.13 கோடி செலவில் கட்டப்பட்ட இந்நிறுவன ஆராய்ச்சி மையத்தை இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று திறந்து வைத்தார்.



பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 7 மாத ஆண் சிங்கக் குட்டிக்கு விஷ்ணு என்று பெயர் சூட்டினார்.

2011-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண் சிங்கக் குட்டிக்கு ஜான்சி என்ற பெயர் சூட்டினார். தற்போது அந்த சிங்கம் ஈன்ற குட்டிக்குதான் அவர் பெயர் சூட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், பெஞ்சமின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எம்.பி.க்கள் கே.என்.ராமச்சந்திரன், மரகதம் குமாரவேல், ஜெயவர்தன், மாவட்ட செயலாளர்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன், ஆறுமுகம் உடன் சென்றனர்.

வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் வன உயிரின பாதுகாப்பு, ஊழியர்களுக்கு பயிற்சி போன்றவை மேற்கொள்ளப்படும். இந்தியாவில் 2-வதாக உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் வண்டலூரில் அமைக்கப்பட்டு உள்ளது.

Similar News