செய்திகள்

காஞ்சீபுரம் அருகே ரூ.2½ கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்பு: 4 பேர் கைது

Published On 2017-10-11 06:59 GMT   |   Update On 2017-10-11 06:59 GMT
காஞ்சீபுரம் அருகே 800 ஆண்டு பழமை வாய்ந்த ரூ.2½ கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலை ஒன்று மீட்க்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் உத்தரவின் பேரில் போலீசார் தமிழகம் முழுவதும் சிலை கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஐம்பொன் சிலை கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.க்கள் ரகுவரன், சிவசங்கரன், ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று இரவு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று அதிகாலை காஞ்சீபுரம் அடுத்த ஆரிய பெரும்பாக்கத்தில் சாலையோரம் ஒரு ஆம்னி வேன் நின்று கொண்டிருந்தது. அதில் 4 பேர் இருந்தனர். இதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் வேனில் சோதனை செய்தபோது 1¾ அடி உயரம், 17 கிலோ எடையுள்ள ஐம்பொன் சிலை இருந்தது. அது 800 ஆண்டு பழமை வாய்ந்த சைவ சமய புரவலர்களில் ஒருவரான சுந்தரரின் சிலை என்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும்.

சிலையை மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விற்க கடத்தி சென்றபோது போலீசாரிடம் சிக்கினர்.

விசாரணையில் பிடிபட்ட 4 பேரும் சேகர், கார்த்தி, மகேந்திரன், தட்சிணாமூர்த்தி என்பது தெரிய வந்தது.

அவர்களை பாலு செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது, யாரிடம் வாங்கி யாருக்கு விற்க கொண்டு செல்லப்பட்டது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News