செய்திகள்

காஞ்சீபுரத்தில் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய வாலிபர்

Published On 2017-10-10 13:20 IST   |   Update On 2017-10-10 13:21:00 IST
காஞ்சீபுரத்தில் கோவில் வாசலில் பிச்சை எடுத்த ரஷ்ய வாலிபருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், மேற்கு ராஜ வீதியில் குமரகோட்டம் முருகன் கோவில் உள்ளது. கந்த புராணம் அரங்கேறிய இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்வர்.

இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அப்போது கோவில் வாசலில் வெளிநாட்டு வாலிபர் அமர்ந்து தனது தொப்பியை வைத்து பிச்சை எடுப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வெளிநாட்டு வாலிபர் நமது ஊரில் பிச்சை எடுக்கிறாரே என கூறியபடி பக்தர்கள் பலர் அவரது தொப்பியில் பணம் போட்டுச் சென்றனர்.

அவர், ‘நான் இந்தியாவை சுற்றிப்பார்க்க வேண்டும் என்னிடம் பணம் இல்லை உதவி செய்யுங்கள்’ என சைகை மூலம் கேட்டு தொடர்ந்து பிச்சை எடுத்தார்.

இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிச்சை எடுத்த வெளிநாட்டு வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த எவிக்மி என்பது தெரிய வந்தது.



நான் சென்னை செல்ல வேண்டும். எனவே பிச்சை எடுத்தேன் என்று தெரிவித்தார். அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இருந்தன. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் துளசி மற்றும் போலீசார் அவரிடம், இது போன்று பிச்சை எடுக்கக் கூடாது என்று அறிவுரை கூறினர். மேலும் சிறிது பணத்தினை கொடுத்து சென்னை செல்லும் ரயிலில் ஏற்றி அவரை அனுப்பி வைத்தனர்.

கோவில் வாசலில் ரஷ்ய நாட்டு இளைஞர் பிச்சையெடுத்த சம்பவம் பக்தர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News