செய்திகள்

10-ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

Published On 2017-09-23 11:30 GMT   |   Update On 2017-09-23 11:30 GMT
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 10-ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கிராமத்தில் ஒருவர் மருத்துவ படிப்பு படிக்காமலேயே போலியான சான்றிதழை தயார் செய்து கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பியர்லின் மேபல்ரூபமதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் விக்கிரவாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜ்குமார், விழுப்புரம் சரக மருந்துகள் ஆய்வாளர் சுகுமாறன், போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளைச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் பனையபுரம் கிராமத்தில் இயங்கி வந்த கிளினிக்கிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒருவர், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தபடி மருந்து, மாத்திரைகளை வழங்கி கொண்டிருந்தார்.

உடனே அவர் வைத்திருந்த சான்றிதழை வாங்கி பார்த்தபோது அது போலியான சான்றிதழ் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் பனையபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 44) என்பதும், 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் மருத்துவ படிப்பு படித்ததுபோன்று போலியான சான்றிதழை தயார் செய்து வைத்துக்கொண்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து நலப்பணிகள் இணை இயக்குனரின் உத்தரவின்படி விஸ்வநாதனை போலீசார் கைது செய்து, கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News