செய்திகள்

பவானி அருகே இரு சக்கர வாகனம் மீது மோதி தீப்பிடித்து எரிந்த சொகுசு பஸ்: பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2017-09-03 19:28 IST   |   Update On 2017-09-03 19:28:00 IST
இரு சக்கர வாகனம் மீது பஸ் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பவானி:

கோவையில் இருந்து புதுச்சேரி நோக்கி நேற்று இரவு சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.

நள்ளிரவு நேரத்தில் அந்த பஸ் ஈரோடு மாவட்டம் பவானியை பகுதிக்கு வந்தது. சித்தோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே வந்தபோது அங்கு நின்ற இரு சக்கர வாகனம் மீது பஸ் மோதியதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பயணிகளில் பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

பஸ் தீப்பிடித்து எரிந்ததும் பயணிகள் அனைவரும் எழுப்பி விடப்பட்டனர். பஸ் எரிவதை பார்த்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு சூட்கேஸ், பைகளை தூக்கிக் கொண்டு விரைவாக கீழே இறங்கினர்.

இதன் காரணமாக அனைவரும் உயிர் தப்பினர். இது பற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. பஸ்சில் வந்த பயணிகள் வேறு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது. இரு சக்கர வாகனம் மீது மோதியதால்தான் பஸ் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Similar News