செய்திகள்

நாகப்பட்டினம் அரசு பள்ளிக்கு சுகாதாரத்திற்கான தேசிய விருது: செப்.1-ந்தேதி ஜனாதிபதி வழங்குகிறார்

Published On 2017-08-30 18:24 IST   |   Update On 2017-08-30 18:24:00 IST
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சுகாதாரத்திற்கான தேசிய வி்ருதை வழங்க இருப்பதாக மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம்:-

இந்திய அளவில் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் அரசு பள்ளியை தேர்வு செய்து ஆண்டுதோறும் தேசிய விருது வழங்குவது வழக்கம். மத்திய மனித வள அமைச்சகம் பள்ளிகளின் ஆய்வு நடத்திய பிறகே இந்த விருதை அறிவிக்கும்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சன்குப்பம் என்ற கிராமத்தில் இயங்கி வரும் பஞ்சாயத்து அரசு ஆரம்ப பள்ளிக்கு வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கிராமம் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதில் பள்ளி கட்டடங்கள் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. இதில் இப்பள்ளியில் பயின்ற 80 மாணவர்கள் உள்பட இக்கிராமத்தில் 570 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அதன் பிறகு அக்கிராமத்தில் உள்ளவர்கள் அயராத முயற்சியால் பள்ளியில் சுகாதாரத்தை மேம்படுத்தினர். கடினமான சூல்நிலையில் இருந்து வழக்கமான நிலைமைக்கு திரும்பி சிறந்த சுகாதாரத்தை ஏற்படுத்தியதை பாராட்டி 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை அரசு வழங்க உள்ளது. மேலும், பள்ளியில் பாதுகாப்பான குடிநீர், சுத்தமான கழிவறைகள் மற்றும் கைகளை சுத்தம் செய்யும் பழக்கம் போன்றவை சிறப்பாக இருப்பதால் சுகாதாரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 அரசு பள்ளியிலிருந்து தமிழ்நாட்டின் பள்ளிக்கு இந்த விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News