செய்திகள்

கடன் தொல்லை: காதில் வி‌ஷம் ஊற்றி கணவன்- மனைவி தற்கொலை

Published On 2017-07-20 17:48 IST   |   Update On 2017-07-20 17:48:00 IST
சேத்தியாதோப்பு அருகே கடன் தொல்லையல் கணவன்-மனைவி காதில் வி‌ஷம் ஊற்றி தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள டி.ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 65). விவசாயி. இவரது மனைவி தையல் நாயகி(60). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.மூத்தமகன் சிவானந்தம் மட்டும் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கந்தசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வீடு ஒன்று கட்டினார். இதற்காக அவர் தனியார் நிறுவனத்திடம் கடன் வாங்கினார். அந்த கடனை தனியார் நிறுவனத்தினர் அவரிடம் கேட்டனர். அவர் தனது மகன்களை அந்த கடன் தொகையை தனியார் நிறுவனத்திடம் செலுத்துமாறு கூறினார்.

ஆனால் அவர்கள் அந்த பணத்தை தனியார் நிறுவனத்திடம் கொடுக்கவில்லை. இதனால் கடன் தொல்லை காரணமாக கந்தசாமியும், தையல் நாயகியும் மனம் வருந்தினர்.

இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலையிலும் தகராறு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். நேற்று இரவு 7 மணியளவில் கந்தசாமியும், தையல்நாயகியும் தங்கள் காதில் வி‌ஷத்தை ஊற்றினர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் மயங்கி விழுந்தனர்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் தையல் நாயகி இறந்து விட்டார். ஆஸ்பத்திரியில் கந்தசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாப இறந்தார்.

இந்தசம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

கணவன்-மனைவி காதில் வி‌ஷம் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News