செய்திகள்

பணிநாட்கள் குறைப்பு: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 8-வது நாளாக வேலைநிறுத்தம்

Published On 2017-07-19 15:42 IST   |   Update On 2017-07-19 15:42:00 IST
பணிநாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 8-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி:

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம், வீடு கொடுத்தவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் மாதத்தில் 29 நாட்கள் பணி வழங்கி வந்தது. இந்த நிலையில் வேலை நாட்களை 19 நாட்களாக குறைத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 12-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பணி அலுவலகம் முற்றுகை, அதிகாரிகள் சிறைபிடிப்பு போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இன்று 8-வது நாளாக அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று புதுவையில் உள்ள உதவி தொழிலாளர் நல ஆணையர் கணேசன் தலைமையில் போராட்டம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகள், ஒப்பந்த தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு காணப்படும் என்று தெரிகிறது. பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படாவிட்டால் இன்று மாலை 7 மணிக்கு நெய்வேலி எட்டு ரோடு பகுதியில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தொழிற் சங்க நிர்வாகிகள் கூறினர்.

Similar News