புதிய மதுக்கடைக்கு வீட்டில் அறை கொடுத்த விவசாயி: பெண்களை திரட்டி தாய்-மனைவி போராட்டம்
கண்ணமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் புதுப்பாளையம் ரைஸ்மில் கார கொட்டா பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 46). விவசாயி. இவர் தனது நிலத்திலேயே மாடி வீடு கட்டி வசித்து வருகிறார். ஏழுமலையின் தாய் வள்ளியம்மாள், மனைவி நிர்மலா தேவி.
புதுப்பாளையத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த 2 டாஸ்மாக் கடைகள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டுவிட்டன. இதனால் அப்பகுதி மக்கள், நிம்மதியில் இருந்தனர். இந்த நிலையில், புதிய டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
மதுக்கடைக்கான இடத்தை தேர்வு செய்தபோது, தனது வீட்டின் தரை தளத்தில் உள்ள அறையை கொடுக்க ஏழுமலை முன் வந்தார். இதற்காக மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வரை வாடகை கொடுப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, முதற்கட்டமாக நேற்று குறைந்த அளவு மது பாட்டில்கள் கொண்டு வரப்பட்டு, வீட்டின் அறையில் வைக்கப்பட்டது.மாலை 3 மணியளவில் மது விற்பனை தொடங்கியது.
இதற்கு, ஏழுமலையின் தாய் மற்றும் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதம் செய்தனர். மதுக்கடை திறக்கப்பட்ட முதல் நாளே ஏராளமானோர் குடித்து விட்டு வீட்டு முன்பு போதையில் விழுந்து கிடந்தனர்.
மதுக்கடையை அகற்ற முடியாது என்று விவசாயி திட்ட வட்டமாக கூறி விட்டார். இதனால் ஆத்திர மடைந்த அவரது தாயும், மனைவியும் அப்பகுதி பெண்களை திரட்டி இன்று காலை டாஸ்மாக் கடைக்கு முன்பு போராட்டம் செய்தனர்.
தகவலறிந்து வந்த கண்ண மங்கலம் போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர்.
தங்கும் வீட்டில் டாஸ்மாக் கடைக்கு அறை கொடுத்த கணவரை கண்டித்து தாயும், மனைவியும் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.