செய்திகள்

சசிகலா- டி.டி.வி.தினகரன் பற்றி பேச்சு: அரி எம்.பி.க்கு போனில் கொலை மிரட்டல்

Published On 2017-06-28 13:51 IST   |   Update On 2017-06-28 13:51:00 IST
சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் பற்றி பேசியதற்கு அரக்கோணம் தொகுதி எம்.பி. அரிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து திருத்தணி போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
பள்ளிப்பட்டு:

அரக்கோணம் தொகுதி எம்.பி., கோ.அரி. இவர் திருத்தணி, முருகப்பா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அ.தி.மு.க. (அம்மா) அணியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளராக உள்ளார்.

நேற்று முன்தினம் அரி எம்.பி நிருபர்களிடம் கூறும் போது “அ.தி.மு.க வை விட்டு சசிகலா, டி.டி.வி தினகரன் குடும்பத்தினர் நிரந்தரமாக விலக வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இதற்கு டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலடி கொடுக்கும் வகையில் வெற்றிவேல் எம்.எல்.ஏ, “சசிகலா பற்றி பேச அரி எம்.பி.க்கு அருகதை இல்லை” என்று கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆதரவாளர்களிடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரி.எம்.பி.யின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் பலர் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். சசிகலா - தினகரன் பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் அரி எம்.பி. புகார் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தொண்டாற்றி வருகிறேன். கடந்த 26-ந் தேதி கட்சி ரீதியாக பேட்டி கொடுத்தேன். அதில் சசிகலா, தினகரன் பெயரை குறிப்பிட்டு இருந்தேன்.

இதை பார்த்த சசிகலா- தினகரன் ஆதரவாளர்கள் என்னுடைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து பேசி வருகின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

புகார் மனுவில் கொலை மிரட்டல் விடுத்து பேசியவர்களின் செல்போன் எண்களையும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மொத்தம் 31 செல்போன் எண்களை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அ.தி.மு.க நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News