செய்திகள்

அரியலூர் அருகே 3-ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

Published On 2017-06-13 16:10 IST   |   Update On 2017-06-13 16:10:00 IST
அரியலூர் அருகே பள்ளி திறந்த ஒரு வாரத்திலேயே 3-ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ஆசிரியரை சஸ்பெண்டு செய்து அதிகாரி உத்தரவிட்டார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இடையார் கிராமத்தை சேர்ந்த மேகநாதன் (வயது 48) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இங்கு தத்தனூரை சேர்ந்த சோழராஜன் மகன் தீபக் (8) 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று ஆசிரியர் மேகநாதன் 3-ம் வகுப்பிற்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது தீபக் அடிக்கடி தண்ணீர் குடித்துள்ளான். இதைக்கண்ட மேகநாதன், தீபக்கை தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் தீபக் சத்தம் போட்டுள்ளான். சத்தத்தை கேட்டு அருகில் இருந்த முன்னாள் ஊராட்சி தலைவர் சாமிதுரை மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு சென்றனர். பின்னர் ஆசிரியர் மேகநாதனிடம் தட்டிக்கேட்டனர்.

அப்போது அவர் தகாத வார்த்தையால் பேசி அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மேகநாதனை வகுப்பறையில் வைத்து பூட்டினர். மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்ய கோரி பொதுமக்கள் சிதம்பரம்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், தகாதவார்த்தையால் பேசி தாக்குதல் நடத்திய ஆசிரியர் மேகநாதனை பணியிடை நீக்கம் செய்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அனந்த நாராயணன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அசோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் ஆசிரியர் மேகநாதனை பணியிடை நீக்கம் செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிதம்பரம்-திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மாணவன் தீபக்கை தாக்கிய ஆசிரியர் மேகநாதனை போலீசார் கைது செய்தனர்.

Similar News