தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மு.க.ஸ்டாலின் போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு அனுமதி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கடந்த 9-ந்தேதி நடந்த அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பங்கேற்க சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் போலீசார் கைது செய்தனர்.
தமிழக முதல்வரை வழி மறிக்கும் திட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் முன்னெச்சரிக்கையாக அவர்களை கைது செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான எம்.எல்.ஏ.க்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கைது செய்த தமிழக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை பி.யு.சின்னப்பா பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லப் பாண்டியன் மதுரை ஐகோர்ட் கிளையில், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க மனு தாக்கல் செய்தார். நீதிபதி, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று மாலை திட்டமிட்டப்படி புதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் திருச்சி சென்றார். அங்கு தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் அவர், புதுக்கோட்டைக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்.