செய்திகள்

பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியருக்கு வெற்றிலை பாக்கு வைத்து வழியனுப்ப முயன்ற பெற்றோர்

Published On 2017-06-08 20:50 IST   |   Update On 2017-06-08 20:50:00 IST
பள்ளிக்கு ஒழுங்காக வராததால் ஆசிரியரை இடைநீக்கம் அல்லது இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வஞ்சின புரம் கிராமம் உள்ளது. இங்குள்ள  அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு பயிற்றுவிக்க  பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கொளஞ்சியப்பன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ளார். பள்ளிக்கு வந்தாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு உடனே தன் சொந்த வேலையினை பார்க்க சென்று செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இது குறித்து  மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் ஆசிரியர் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை  என கூறப்படுகிறது.

இதனையடுத்து பள்ளிக்கு ஒழுங்காக வராமல், வந்தாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் இருக்கும் ஆசிரியர் கொளஞ்சியப்பனை  இடைநீக்கம் அல்லது  இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர்கள் கையில் வெற்றிலை,பாக்கு தட்டுடன் வந்து  பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் பள்ளிக்கு வந்த ஆசிரியர் கொளஞ்சியப்பனுக்கு தாம்பூல தட்டினை கொடுத்து வழியனுப்பி வைக்க முயன்றனர். தகவலறிந்த தலைமை ஆசிரியர் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது இனிமேல் கொளஞ்சியப்பன் தவறாமல் பள்ளிக்கு வருவதாக ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், தவறினால் அவர் மீது பள்ளி சார்பில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பெற்றோர்கள் தங்களது போராட்டத்தினை கைவிட்டனர்.

Similar News