செய்திகள்

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.26½ லட்சம் மோசடி: வருவாய் ஆய்வாளர் கைது

Published On 2017-06-08 09:45 IST   |   Update On 2017-06-08 09:45:00 IST
சிவகங்கையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.26½ லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை நகர் அகிலாண்டபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை, ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர். இவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.வாகைக்குளத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது கால்நடை துறையில் உதவியாளர் பணி வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் தேவைப்படும் என்றும் அண்ணாத்துரை கூறி உள்ளார்.

இதனை நம்பி அந்த பகுதியைச் சேர்ந்த கார்த்திக் உள்பட 13 பேர் பல்வேறு தவணைகளில் ரூ.26 லட்சத்து 53 ஆயிரம் கொடுத்தனர்.

பணம் வாங்கி மாதங்கள் பல ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது அண்ணாத்துரை சரியான பதில் அளிக்கவில்லை.

இதனையடுத்து கார்த்திக் உள்பட பாதிக்கப்பட்ட 13 பேர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர். அதில், வேலை வாங்கித்தருவாக கூறி அண்ணாத்துரை பண மோசடி செய்ததாகவும், இதற்கு உடந்தையாக அவரது நண்பர் ரவிச்சந்திரன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம், சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா, தைமை காவலர்கள் வெள்ளைச்சாமி, முத்துராமலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அண்ணாத்துரையை கைது செய்தனர். ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.

Similar News