செய்திகள்

காரைக்குடி அருகே நகை, பணத்துடன் நகை வியாபாரி கடத்தல்

Published On 2017-06-07 12:50 IST   |   Update On 2017-06-07 12:51:00 IST
காரைக்குடி அருகே 41 பவுன் நகை, ரூ 1 லட்சத்துடன் வியாபாரியை காரில் கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள முத்தூரணியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 35). இவரது நண்பர் முருகானந்த். இவர்கள் 2 பேரும் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள். நகையை விற்க இவர்கள் வெளியூர் சென்று வருவது வழக்கம்.

அதன்படி நேற்று ஹரிபிரசாத், முருகானந்த் ஆகியோர் காரில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு சென்று நகைகளை விற்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அறந்தாங்கியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் ஹரிபிரசாத்துக்கு தலையில் காயம் ஏற்பட்டது. முருகானந்த் காரிலேயே மயங்கினார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒரு கும்பல், கார் கவிழ்ந்து கிடப்பதை பார்த்து நிறுத்தியது. அவர்கள் விபத்துக்குள்ளான காரின் அருகே சென்று பார்த்தபோது உள்ளே 2 பேர் காயங்களுடன் கிடந்துள்ளனர். மேலும் காரில் நகை, பணம் இருந்துள்ளதையும் பார்த்தனர்.

உடனே அந்த கும்பல் காரைக்குடியில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி நகை, பணத்துடன் 2 பேரையும் காரில் ஏற்றிக் கொண்டு சென்றது.

அவர்கள் மெயின்ரோடு வழியாக செல்லாமல் காட்டுப்பகுதி வழியாக சென்றனர். இதனால் ஹரி பிரசாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.

காரைக்குடி அருகே உள்ள புதுவயல் கண்டனூர் காட்டுப்பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது ஹரிபிரசாத் நகை, பணத்துடன் திடீரென்று கார் கதவை திறந்து கொண்டு வெளியே குதித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கும்பல் காரை நிறுத்தியது. ஹரிபிரசாத் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் இறங்கி ஹரிபிரசாத்தை பிடித்தது.

பின்னர் அவரை கட்டையால் அந்த கும்பல் தாக்கியது. இதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டு அவரை மட்டும் விட்டு விட்டு, முருகானந்தத்தை அவர்கள் காரில் கடத்தி சென்றனர்.

காயங்களுடன் இருந்த ஹரிபிரசாத் அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் காரைக்குடிக்கு வந்தார். அவர் சாக்கோட்டை போலீசில் நடந்த விபரத்தை கூறினார். 41 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கத்துடன் முருகானந்தத்தை மர்ம கும்பல் கடத்தி சென்றதாக தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து நகை, பணத்துடன் வியாபாரியை கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News