செய்திகள்
நெடுவாசலில் கள்ளிச்செடியிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது

ஹைட்ரோ கார்பனுக்கு தடை கோரி நெடுவாசலில் 50-வது நாளை எட்டிய எதிர்ப்பு போராட்டம்

Published On 2017-05-31 11:10 IST   |   Update On 2017-05-31 11:10:00 IST
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் இன்று 50-வது நாளை எட்டியுள்ளது. நேற்று நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி சிறுவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் 2-ம் கட்ட போராட்டத்தை கடந்த மாதம் 12-ந்தேதி தொடங்கினர். இன்றுடன் போராட்டம் 50-வது நாளை எட்டியுள்ளது.

நேற்று நடந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விவசாயிகள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டார். அப்போது அவர், தொழு நோய் தாக்கியவர் போல் வேடமணிந்து கள்ளிச்செடியிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும் அப்பகுதி ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கைகளில் பதாகைகள் ஏந்தியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து விவசாயிகள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் தங்கசண்முக சுந்தரம் கூறுகையில், விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பாக கள்ளிச்செடியை தான் வரப்புகளில் வளர்த்து வருவோம். அது போல மத்திய, மாநில அரசுகள் விவசயிகளுக்கு பாதுகாப்பாக இல்லாமல், விவசாயிகளை அழிக்கும் நோக்கோடு இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

எனவே, மத்திய மாநில அரசுகள் விவசாயிகளாகிய எங்களை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை செயல் படுத்தமாட்டோம் என்று அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.





Similar News