மாட்டிறைச்சிக்கு தடை: மக்களின் வெறுப்பை பா.ஜனதா சம்பாதிக்கிறது - திருநாவுக்கரசர் பேட்டி
ஆலந்தூர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஜூன் 3-ந்தேதி நடக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவில் பங்கேற்கும் ராகுல்காந்தியின் சுற்றுப் பயண நிகழ்ச்சி குறித்தும், கட்சியில் சில நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் ராகுல்காந்தி, முகுல் வாஸ்னிக்குடன் பேச உள்ளேன்.
மெரினாவில் போராட்டம் நடத்திய மே 17 இயக்கத்தினர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து இருக்கிறது. பொதுவாக போராட்டம் நடைபெறும்போது போராட்டம் எதுவாக இருந்தாலும் அதில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, குண்டர் சட்டம் போடுவது தேவையில்லாதது. இந்த நடவடிக்கை அதிகபட்சமானது.
மோடியின் பா.ஜனதா அரசின் 3 ஆண்டு ஆட்சி தோல்வியில் முடிந்துள்ளது. பா.ஜனதா மக்களின் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது.
மதரீதியாகவும், இந்தி, சமஸ்கிருத திணிப்பு, பொது சிவில் சட்டம், அதன் தொடர்ச்சியாக மாட்டிறைச்சிக்கு தடை என்று மக்களிடம் பிளவை ஏற்படுத்தி இருக்கிறது.
மாட்டிறைச்சிக்கு தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த சட்டம் குறித்து கருத்து கூற தமிழக அரசு மத்திய அரசுக்கு பயப்படுகிறது. தயக்கம் காட்டுகிறது.
மற்ற மாநிலங்கள் போல் தமிழகத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. மத்திய அரசின் நீர்ப்பந்தத்தை ஏற்க கூடாது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.