செய்திகள்

மத்திய அரசை கண்டு தமிழக அரசு மிரள்கிறது: முத்தரசன்

Published On 2017-05-23 04:39 GMT   |   Update On 2017-05-23 04:39 GMT
பெரும்பான்மை இருந்தும் மத்திய அரசை கண்டு தமிழக அரசு மிரள்கிறது என நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழகம் முழுவதும் வறட்சி காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டாஸ்மாக் கடைக்கு எதிராக அதிகளவில் பெண்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் பெண்கள் மீது தடியடி நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்குவதை கைவிட்டு, தமிழக அரசு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். மேலும், புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பதை கைவிட வேண்டும். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் ஆறுகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை ஒப்பந்ததாரர் சேகர்ரெட்டி மட்டுமே எடுத்துள்ளார். தமிழகத்தில் சேகர்ரெட்டியை தவிர ஒப்பந்ததாரர்கள் வேறு யாரும் இல்லையா?, நாகையை அடுத்த வேட்டைக்காரனிருப்பு பகுதியில் கடல்நீர் விளை நிலங்களுக்குள் புகாமல் இருக்க தடுப்பணை அமைப்பதாக கூறி கட்டப்படுகிறது. ஆனால் இந்த தடுப்பணை அதற்காக கட்டவில்லை. இறால் பண்ணைகளுக்கு சாதகமாகவே கட்டப்படுகிறது. வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 2015-16-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.

எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. பெரும்பான்மை இருந்தும் தமிழக அரசு செயல்பட தயங்குகிறது. அதனால்தான் மத்திய அரசு மிரட்டுகிறது. தமிழக அரசு மிரள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News