செய்திகள்

புதுக்கோட்டை தனியார் லாட்ஜில் வங்கி பெண் ஊழியர் தற்கொலை

Published On 2017-05-14 21:32 IST   |   Update On 2017-05-14 21:32:00 IST
புதுக்கோட்டை தனியார் லாட்ஜில் வங்கி பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை:

தஞ்சாவூர் மாவட்டம் சித்துக்காடு பகுதியை  சேர்ந்தவர் வேலு மகள் அருணா (வயது 26). பெற்றோர் இறந்து விட்டதால்  அருணா புதுக்கோட்டை  மாவட்டம்  அறந்தாங்கி அருகே மறமடக்கியில் உள்ள  அவரது  உறவினர் ஒருவரின்  அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம்  ஒரத்தநாட்டில்  உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து  வந்தார்.  அங்குள்ள விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்த அவர், வார விடுமுறையில் மட்டும் மறமடக்கியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து செல்வார்.

கடந்த  3  நாட்களுக்கு முன்பு  வங்கியில் இருந்து விடுதிக்கு  செல்வதாக  சக ஊழியர்களிடம்  கூறிவிட்டு சென்ற அவர் அதன் பிறகு மாயமாகி விட்டார்.  அவரை அவரது  உறவினர்கள்  பல்வேறு  இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி  அருணாவை  தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை  புதுக்கோட்டை பேருந்து  நிலையம்  அருகே உள்ள  தனியார்  லாட்ஜின் அறையில் மின்விசிறியில் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்குவதாக புதுக் கோட்டை  டவுன்  போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது மாயமான  அருணா என்பது தெரிய வந்தது.  அவரது உடலை  மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக் கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி  வைத்தனர்.

மேலும்  அவர்  எப்படி இறந்தார் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி பணியின் போது அருணா    வாடிக்கையாளர் ஒருவரின்  கணக்கில்  ரூ.8 ஆயிரத்திற்கு பதில் ரூ.80 ஆயிரத்தை வரவு வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருணா , வாடிக்கையாளரை தொடர்பு  கொண்டு  மீதி பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார்.  ஆனால் அந்த வாடிக்கையாளர்  ரூ.60ஆயிரம்  பணத்தை  மட்டுமே செலுத்தினாராம். மீதி பணத்தை  செலுத்தாததால் அந்த பணத்தை அருணாவின் சம்பள  பணத்தில் இருந்து வங்கி  நிர்வாகம்  பிடித்துக் கொண்டது.
 
மேலும் கவனக்குறைவாக செயல்பட்டதாக  அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட தாகவும்  கூறப்படுகிறது. இதனால்  மன  உளைச்சலில் இருந்து வந்த அருணா, 3 நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு சென்றுள்ளார்.

அப்போது  உறவினர் வீட்டிற்கு செல்லாமல் நேராக லாட்ஜுக்கு சென்று தங்கியுள்ளார்.  அங்கு  மன உளைச்சல் காரணமாக தூக்குப்போட்டு    தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெற்றோரை இழந்து தவித்ததால்  தற்கொலை செய்து கொண்டாரா? என்றும்  பல்வேறு  கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி பெண் ஊழியர் தற்கொலை செய்து  கொண்ட  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News