செய்திகள்

திருமாவளவனுக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல்: 2 வாலிபர்கள் கைது

Published On 2017-04-25 11:23 IST   |   Update On 2017-04-25 11:23:00 IST
திருமாவளவனுக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன், சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

இதை கண்டித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வரும் திருமாவளவனை வெடிகுண்டு வீசி கொலை செய்வோம் என்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் மிரட்டல்கள் வந்தன.

மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் உதயகுமாரின் செல்போனில் பேசிய மர்ம நபரும் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த மிரட்டல்கள் குறித்து தொகுதி செயலாளர் முத்துராஜா, சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் விசாரணை நடத்தினார்.

திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிவகங்கையைச் சேர்ந்த மணி (வயது 23), வேம்பத்தூரைச் சேர்ந்த கார்த்திக் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Similar News