செய்திகள்

காஞ்சீபுரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் படுகொலை

Published On 2017-04-06 15:17 IST   |   Update On 2017-04-06 15:17:00 IST
காஞ்சீபுரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:

பெரிய காஞ்சீபுரம் வெள்ளகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மகன் சந்திரசேகர் (வயது 29). இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

காஞ்சீபுரம் நகர தி.மு.க. பகுத்தறிவு கலை இலக்கிய அமைப்பில் முன்னாள் நகர துணை செயலாளராகவும் இருந்தார்.

நேற்று மாலை சந்திரசேகர் வீட்டில் இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு பேசிய மர்ம நபர் வெளியே வருமாறு அழைத்தார்.

இதையடுத்து சந்திரசேகர் உப்பேரிகுளம் சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென சந்திரசேகரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

இது குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், காஞ்சீபுரம், திரு வள்ளூரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட ஒரு வார்டில் சீட்டு பெறுவதில் சந்திரசேகருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் சில பதிவுகள் செய்தார். சிங்கத்தின் நிழலில் பூனை இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். சில வாசகங்களையும் கிண்டலுடன் எழுதி இருந்தார்.

மேலும் காஞ்சீபுரத்தில் புதிதாக பிரபல ரவுடி என்று நம்ப வைத்து பூச்சாண்டி காட்டும் கேங் லீடரின் மிரட் டல் ஆடியோவை கேட்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்றும் பதிவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக சிலருடன் சந்திரசேகருக்கு மோதல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே இந்த தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

சந்திரசேகர் கிண்டல் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தது பிரபல ரவுடி ஸ்ரீதரை பற்றியது என்று தெரிகிறது. எனவே அவரது ஆதரவாளர்கள் சந்திரசேகரை தீர்த்துக் கட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

சந்திரசேகரை வெளியே அழைக்க முதலில் செல்போனில் பேசியது யார்? கடைசியாக அவர் யார்-யாருடன் பேசி உள்ளார் என்ற விபரத்தையும் போலீஸ் சேகரித்து வருகிறார்கள்.

மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் கொலை நடந்துள்ளதால் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Similar News