மோட்டார் சைக்கிள்கள் மீது சரக்கு வேன் மோதல்: என்ஜினீயரிங் மாணவர்கள் 3 பேர் பலி
திருப்போரூர்:
தாம்பரத்தை அடுத்த கோவிலம்பாக்கம், காந்தி நகர் 17-வது தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சக்திவேல் (வயது 22). செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை அவர் உடன் படிக்கும் நண்பர்கள் சசிகுமார் (22), ரவிக் குமார் (21), பிரகாஷ் (22) ஆகியோருடன் மாமல்லபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
2 மோட்டார் சைக்கிளில் சென்ற அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்தில் இருந்து புறப்பட்டனர்.
கேளம்பாக்கம் ஜங்ஷன் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது மரக்காணத்தில் இருந்து இளநீர் ஏற்றி வந்த சரக்கு வேன் திடீரென 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் பல அடி தூரத்துக்கு மோட்டார் சைக்கிள்கள் தூக்கி வீசப்பட்டன.
மோதிய வேகத்தில் சரக்கு வேனும் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் சக்திவேல், ரவிக்குமார், சசிகுமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பிரகாஷ் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார். விபத்து நடந்ததும் கவிழ்ந்த வேனில் இருந்த டிரைவர் தப்பிச்சென்று விட்டார். அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த பிரகாசுக்கு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பலியான ரவிக்குமாரின் சொந்த ஊர் செய்யாறு. இவரது தந்தை கருணாநிதிபொதுப்பணித்துறையில் அதிகாரியாக உள்ளார். சசிகுமாருக்கு பாளையங் கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் ஆகும். காயம் அடைந்த பிரகாசுக்கு திண்டிவனம்.
இவர்கள் 3 பேரும் செம்மஞ்சேரி அருகே தனியார் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர். மாமல்லபுரத்துக்கு நண்பர் சக்திவேலுடன் சுற்றுலா சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.
இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.