சிதம்பரத்தில் பள்ளி வளாகத்தில் பிளஸ்-2 மாணவர் சுருண்டு விழுந்து பலி
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள மேல மூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் பாலமுருகன் (வயது 16). சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
வழக்கம்போல் இன்று காலை பாலமுருகன் பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தில் இறைவணக்கம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து அவரவர் வகுப்புகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று பாலமுருகன் சுருண்டு விழுந்தார். ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பாலமுருகனை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பால முருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சிதம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அம்மைநோய் பாதிப்பால் பாலமுருகன் இறந்தது தெரியவந்தது.
மாணவர் பாலமுருகன் பள்ளி வளாகத்தில் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர் மரணத்தை தொடர்ந்து இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.