செய்திகள்
ஈரோட்டில் ஜல்லிக்கட்டை ஆதரித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ-மாணவிகள்.

ஈரோட்டில் 5 மணி நேரம் கல்லூரி மாணவிகள் போராட்டம்

Published On 2017-01-18 10:35 GMT   |   Update On 2017-01-18 10:36 GMT
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஈரோட்டில் கல்லூரி மாணவிகள் 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அலங்காநல்லூரில் பீட்டா அமைப்பை கண்டித்தும் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தியும் நடந்த போராட்டம் ஊர்வலத்தில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த கைதுக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் ஈரோட்டிலும் நேற்று மதியத்துக்கு மேல் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இளைஞர்கள் இளம் பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் திரண்டனர்.

ஆயிரக்கணக்கான பேர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

காளைமாட்டு சிலையிலிருந்து ஊர்வலமாக சென்ற அவர்கள் மீண்டும் காளைமாட்டு சிலை அருகே வந்து கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அலங்காநல்லூரில் கைதான தமிழர்களை இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர்.

“தமிழர்களை சீண்டாதே... ஜல்லிக்கட்டை முடக்காதே..” என இளம்பெண்களும் ஆவேசமாக கோ‌ஷங்களை எழுப்பினர்.

அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் வண்டிகளை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த வழியாக நடந்து சென்ற மக்களும் அவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போரட்டம் 5 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.

போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கோரசாக குரல் எழுப்பியதால் பதட்ட நிலை ஏற்பட்டது. டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் இளைஞர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

எனினும் எங்கள் போராட்டம் ஓயாது தொடரும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

Similar News