மயிலாடுதுறை அருகே சைக்கிள் கடைக்காரர் அடித்துக் கொலை: மகன் வெறிச்செயல்
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் செட்டி தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (62). இவர் மயிலாடுதுறையில் சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் கடை நடத்தி வந்தார்.
இவரது மகன் தமிழ்வாணன். இவருக்கு திருமணமாகி விவாகரத்தாகி விட்டது. எனவே தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்கும் படி தமிழ்வாணன் தனது தந்தையிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்தார். இதனால் தகராறு ஏற்பட்டு வந்தது.
இன்று காலையும் தமிழ்வாணன் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். இதில் தந்தை -மகனுக்கிடையே தகராறு உருவானது.
இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்வாணன் அங்கு கிடந்த கட்டையால் தந்தையில் தலையில் ஓங்கி அடித்தார். மேலும் கத்தியாலும் குத்தினார். இதில் பார்த்தசாரதி சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
அதன் பின்னர் தமிழ்வாணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
கொலை செய்யப்பட்ட பார்த்சாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி தமிழ்வாணனை போலீசார் தேடி வருகிறார்கள்.
தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.