செய்திகள்
பேனரை அகற்ற வந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

ஆண்டிப்பட்டி அருகே ஓ.பன்னீர்செல்வம் பேனரை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு

Published On 2016-12-26 05:23 GMT   |   Update On 2016-12-26 05:23 GMT
ஆண்டிப்பட்டி அருகே முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பேனரை போலீசார் அகற்ற முயன்றபோது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆண்டிப்பட்டி:

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கட்சிக்கு தலைமை ஏற்க சசிகலா வர வேண்டும் என பேனர் வைத்துள்ளனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த பகுதியான தேனி மாவட்டத்தில் அவருக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் பேனர்கள் வைத்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டி கிராமத்திலும் ஓ.பன்னீர் செல்வத்தை வாழ்த்தி அப்பகுதி அ.தி.மு.க.வினர் நேற்று பேனர் வைத்தனர். அதில் சசிகலா படம், பெயர் இல்லை. இதனால் சசிகலா ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர்.

இந்நிலையில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி அந்த பேனரை அகற்ற கண்டமனூர் போலீசார் அங்கு வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் தமிழக முதல்வரை வாழ்த்தி மட்டுமே பேனர் வைத்துள்ளோம். அதனை அகற்றக்கூடாது என்று கூறி 200-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து போலீசார் பேனரை அற்றும் முயற்சியை கைவிட்டு திரும்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News