செய்திகள்

பயிர் காப்பீட்டு தொகை செலுத்த முடியாததால் மயங்கி விழுந்து விவசாயி இறந்தார்

Published On 2016-11-29 07:03 GMT   |   Update On 2016-11-29 07:03 GMT
பயிர் காப்பீட்டு தொகை செலுத்த முடியாததால் மனமுடைந்த விவசாயி மயங்கி விழுந்து இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்வேளூர்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்புத் தேவர் என்கிற ராஜ்குமார் (65). விவசாயி.

இவருக்கு சொந்தமாக 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் சம்பா பயிர் சாகுபடி செய்து இருந்தார். போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியது.

பயிர்களுக்கு காப்பீடு செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்று நினைத்த ராஜ்குமார் உறவினர்கள், நண்பர்களிடம் கடன் கேட்டு இருந்தார். ஆனால் யாரும் கடன் கொடுக்கவில்லை.

இதனால் மன வேதனையில் இருந்தார். வீட்டில் இருந்த அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த விவசாயி ராஜ்குமாருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

டெல்டா பகுதியில் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை , மயங்கி விழுந்து இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News