செய்திகள்
டி.என்.பாளையம் அருகே மின்வேலியில் சிக்கி இறந்த யானையை படத்தில் காணலாம்.

கடம்பூர் அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி: விவசாயி கைது

Published On 2016-11-04 08:04 IST   |   Update On 2016-11-04 08:04:00 IST
தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி யானை இறந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கடம்பூர் வனப்பகுதி மூலக்கடம்பூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 25). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து இருந்தார். காட்டுப்பன்றி மற்றும் யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்து இருந்தார்.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு யானை தோட்டத்துக்குள் நுழைய முயன்றது. அப்போது அந்த யானை மின்வேலியில் சிக்கியது. இதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே இறந்தது.

நேற்று காலை தோட்டத்து வழியாக சென்றவர்கள் யானை இறந்து கிடப்பதை பார்த்து டி.என்.பாளையம் வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த யானையை பார்வையிட்டனர். கால்நடை டாக்டர் அசோகன் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

இதுபற்றி கால்நடை டாக்டர் கூறுகையில், “இறந்தது ஆண் யானை. சுமார் 30 வயது இருக்கும். யானை தீவனத்தை தேடி தோட்டத்துக்குள் புகுந்தபோது மின்வேலியில் சிக்கி இறந்துள்ளது” என்றார்.

இறந்த யானையின் தந்தங்களை வெட்டிஎடுத்தபின் யானை அந்த பகுதியில் புதைக்கப்பட்டது.

இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தோட்டத்து விவசாயி தங்கவேலை கைது செய்தனர். கைதான அவரை கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து தங்கவேல் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News