Induction | சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: மின்சார அடுப்புக்கு அதிகரிக்கும் மவுசு
- சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- ஆன்லைன் செயலிகளில் மின்சார அடுப்புகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
புதுடெல்லி:
ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதற்கு மாற்றாக மின்சார அடுப்புகளை நாடி வருகின்றனர். பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் மற்றும் செப்டோ போன்ற ஆன்லைன் செயலிகளில் மின்சார அடுப்புகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு 21 நாட்கள் இடைவெளி இருக்கவேண்டும் என மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் மின்சார அடுப்புகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த சில நாளாக மின்சார அடுப்புகளுக்கான தேவை வழக்கத்தை விட 300 சதவீதம் அதிகரித்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் அமேசான் தளத்தில் மின்சார அடுப்புகளின் விற்பனை வழக்கத்தை விட 20 மடங்கு அதிகரித்துள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 4 முதல் 5 நாட்களில் இண்டக்ஷன் அடுப்புகளின் விற்பனை 3 மடங்கு உயர்ந்துள்ளது.
டெல்லி, கொல்கத்தா மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதன் தேவை உச்சத்தில் உள்ளது. மின்சார அடுப்பு என்பது ஆடம்பரப் பொருள் என்பதிலிருந்து மாறி, தற்போது உயிர்வாழும் தேவையாக மாறியுள்ளது .
இதனால் ஆன்லைன் டெலிவரி தளங்களில் ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே அவுட் ஆப் ஸ்டாக் என்ற அறிவிப்பு வருவதாக வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்தனர்.