சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்கும் தகராறில் 2 ரவுடிகள் கொலை
சென்னை:
சென்னையில் சாலையோரம் குடியிருப்பவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு துரைப் பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் பகுதியில் குடியமர்த்தபட்டுள்ளனர்.
இவர்களுக்கு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு வசிப்பவர்கள் பெரும் பாலானவர்கள் கூலித் தொழிலாளர்கள்.
ரவுடி கலியா என்ற ரஞ்சித் குமார்(20) தலைமையில் ஒரு கோஷ்டினரும், அவருக்கு எதிராக இன்னொரு கோஷ்டினரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.
தீபாவளியையொட்டி இரு கோஷ்டியினரும் போட்டி போட்டு கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர். அப்போது இரு கோஷ்டிக்கும் தகராறு ஏற்பட்டது.
தங்கள் பகுதியில் மற்றொரு கோஷ்டியினர் ரகசியமாக கஞ்சா விற்பதை முன்னா கோஷ்டியினர் தட்டிக்கேட்டு தாக்கினார்கள்.
உடனே இரு கோஷ்டியின் ஆதரவாளர்களும் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
ரவுடி கலியாவை எதிர் கோஷ்டியினர் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கலியா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த மோதலின் போது எதிர் கோஷ்டியை சேர்ந்த செபஸ்டின் மில்லர்(25) என்பவர் கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். அங்குள்ள குடியிருப்பின் கழிவு நீர் குழாய் வழியாக ஏறி தப்ப முயன்றார். அப்போது அங்கிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த மோதலில் இரு கோஷ்டியை சேர்ந்த பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில் வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிய செங்கோட்டையன் (20), சக்தி வேல் ஆகிய இருவரையும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் கிடைத்ததும் கண்ணகி நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இந்த மோதலால் கண்ணகி நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
கண்ணகிநகரில் கஞ்சா விற்பனை பகிரங்கமாக நடந்து வருவதாகவும், ஒரு கோஷ்டியினர் கஞ்சா விற்பனை செய்ய சில போலீசார் உடந்தையாக செயல்படுவதாகவும்அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்கள்.
கஞ்சா விற்பனையை ஒருவருக்கொருவர் காட்டி கொடுப்பதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி மோதல்கள் நடை பெறுவதாகவும், கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகம் நடை பெறுவதாகவும் பொது மக்கள் புகார் கூறினார்கள்.