செய்திகள்

மயிலாடுதுறை அருகே மினி பஸ் புளிய மரத்தில் மோதியது: மாணவர்கள் உள்பட 30 பேர் காயம்

Published On 2016-10-20 13:34 IST   |   Update On 2016-10-20 13:34:00 IST
மயிலாடுதுறையில் மினி பஸ் புளிய மரத்தில் மோதி 15 மாணவர்கள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள முத்தூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்று காலை 8.30 மணிக்கு தனியார் மினி பஸ் புறப்பட்டு வந்தது.

இதனை இளந்த பட்டு கிராமத்தை சேர்ந்த சதிஷ் ஓட்டி வந்தார். பள்ளி மற்றும் அலுவலக நேரம் என்பதால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் பஸ்சில் பயணம் செய்தனர்.

இந்த பஸ் மயிலாடுதுறை -திருவாரூர் சாலை சீனிவாசபுரத்தில் வந்த போது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த சுந்தர் ராஜ், ஐஸ்வர்யா, வீரமணி, அருள் தேவி உள்ளிட்ட 15 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.

தனியார் அலுவலகத்தில் வேலை செய்யும் அனிதா மற்றும் 14 பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த 30 பேரும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களை மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் பார்த்து ஆறுதல் கூறினார். மினி பஸ் மரத்தில் மோதிய இடத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் சத்ய குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News