செய்திகள்
கலெக்டரிடம் உதவி கேட்டு மனு கொடுத்த ஏழை மாணவி பிரித்தி.

மருத்துவம் படிக்க இடம்கிடைத்தும் படிக்கமுடியாத ஏழை மாணவி உதவி கேட்டு கலெக்டரிடம் மனு

Published On 2016-10-06 09:32 GMT   |   Update On 2016-10-06 09:32 GMT
ஈரோடு அருகே மருத்துவம் படிக்க இடம்கிடைத்தும் படிக்கமுடியாத ஏழை மாணவி உதவி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டை அடுத்த மைலாடி ஊரைச் சேர்ந்தவர் சின்னசாமி. விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பிரித்தி (வயது 18).

மாணவி பிரித்தி கோபியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்தார். 1088 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

சென்னையில் நடந்த 2-ம்கட்ட மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பிரித்தி கலந்து கொண்டார். அவருக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

கல்லூரியில் சேர்ந்து படிக்க கல்லூரி கட்டணம் மற்றும் இதர கட்டணம் என 6 லட்ச ரூபாய் தேவை பட்டதாம். ஏழை விவசாய கூலி தொழிலாளியின் மகளான பிரித்தியால் இவ்வளவு பணத்தை புரட்ட முடியவில்லை.

இந்த நிலையில் மாணவி பிரித்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஏழை விவசாய தொழிலாளி மகளான எனக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படிக்க ரூ.6 லட்சம் தேவைபடுகிறது. அவ்வளவு பணத்தை கூலி தொழிலாளியான என் தந்தையால் புரட்டமுடியாது. இதனால் மருத்துவம் படிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலையில் உள்ளேன்.

நான் படித்து டாக்டர் ஆகிவிட்டால் என்னைப் போல் ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பேன் என மருத்துவ படிப்புக்கு உதவி செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாணவி பிரித்தி அந்த மனுவில் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News