செய்திகள் (Tamil News)

தமிழ்நாட்டுக்கு கன்னடர்கள் வந்தால் குடிக்க தண்ணீர் கொடுப்போம்: கல்லூரி மாணவர்கள் ருசிகர பிரச்சாரம்

Published On 2016-09-16 10:09 GMT   |   Update On 2016-09-16 10:10 GMT
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து “தமிழ் பசங்க” என்ற அமைப்பினர் ஈரோடு அருகே தமிழ் நாட்டுக்கு காவிரி தண்ணீர் கொடுக்க மறுக்கும் கன்னடர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவர்களின் தாகத்துக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து உபசரிப்போம்” என ருசிகர பிரச்சாரம் செய்தனர்.
ஈரோடு:

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து “தமிழ் பசங்க” என்ற அமைப்பினர் ஈரோடு வ.உ.சி பூங்கா அருகே நின்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

இந்த அமைப்பில் உள்ள கல்லூரி மாணவர்கள் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கவிதை எழுதி அதை பொதுமக்களிடம் கொடுத்தனர்.

மேலும் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா , தமிழனின் எழுச்சி குரல், காவிரி நீரை பகிர்ந்து கொடு” என்பது போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தி வந்தனர்.

இந்த அமைப்பினர் கூறும்போது, “தமிழ் நாட்டுக்கு காவிரி தண்ணீர் கொடுக்க மறுக்கும் கன்னடர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவர்களின் தாகத்துக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து உபசரிப்போம்” என்று கூறினர்.

இந்த அமைப்பின் இளைஞர்கள் கொடுத்த கவிதைகளை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வாங்கி ஆர்வத்துடன் படித்தனர். ஒவ்வொரு கவிதையும் மனதை தொடுவதாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

Similar News