செய்திகள்

விராலிமலை அருகே தி.மு.க. பிரமுகர் எரித்துக்கொலை

Published On 2016-08-23 13:56 IST   |   Update On 2016-08-23 13:56:00 IST
விராலிமலை அருகே குப்பை கிடங்கில் தி.மு.க. பிரமுகர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விராலிமலை:

விராலிமலை அருகே சுடுகாட்டில் எரிந்த நிலையில் கிடந்த தி.மு.க. பிரமுகர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த ராமகவுண்டன்பட்டி கிராமத்தை ஒட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென கரும்புகையுடன் கூடிய துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அங்கு அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் உடல் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது.  தொடர்ந்து அந்த உடலில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் இது குறித்து உடனடியாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் விரைந்து வந்த புதுக்கோட்டை எஸ்.பி. லோகநாதன், கீரனூர் டி.எஸ்.பி. தமிழ்செல்வன், விராலிமலை இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் பிணமாக கிடந்தவர் உடலில் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர்.  பின்னர் கரிக்கட்டையாக கிடந்த அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து புதுக்கோட்டையில் மோப்ப நோய் மார்ஷல் வரவழைக்கப்பட்டது. இந்த நாய் சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.

இதற்கிடையே திருச்சியில் இருந்து தடய அறிவியல் ஆய்வு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆய்வு  செய்ததில் பிணமாக கிடந்தவரின் உடல் அருகே சாவி கொத்துக்கள் கிடந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவர் தி.மு.க. கரை வேட்டி அணிந்திருந்ததும் தெரிய வந்தது. இந்த வேட்டி பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் யார், தி.மு.க. பிரமுகரா, அவரை யாராவது கடத்தி வந்து கொலை செய்து அதனை மறைக்க தீவைத்து எரித்து சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குப்பை கிடங்கில் தி.மு.க. பிரமுகர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் மீது போலீசார் வரும் வரை தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. அவர்கள் வந்த பின்னர்தான் தீயை முழுமையாக அணைத்தனர். எனவே கொலை சம்பவம் சிறிது நேரத்திற்கு முன்னர்தான் நடந்திருக்கவேண்டும் என்றும், கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர்.

இதையடுத்து போலீசார் அனைத்து சோதனை சாவடிகளையும் உஷார் நிலையில் இருக்க செய்தனர். சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள், வாகனம் ஆகியவற்றை சோதனையிட அறிவுறுத்தினர். ஆனால் கொலையாளிகள் யாரும் பிடிபடவில்லை. எனவே கொலையாளிகள் சம்பவ நடந்த பகுதியில் தான் பதுங்கி இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

Similar News