செய்திகள்

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

Published On 2016-08-07 13:38 IST   |   Update On 2016-08-07 13:46:00 IST
சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி மற்றும் செந்நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக புலிகளின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வனத்துறையினர் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தலமலை, கெத்தேசால், கேர்மாளம், திம்பம், பண்ணாரி, தெங்குமரஹாடா ஆகிய வனத்தில் சிறுத்தை புலிகள் அதிகளகவில் நடமாடுகின்றன.

தலமலை காட்டுப்பகுதியில் இருந்து 10, 23, 25 மற்றும் 26ஆவது திம்பம் பாதை வழியாக பண்ணாரி காட்டுக்கு சிறுத்தை இடம்பெருவதால் திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடந்து செல்லும் காட்சி தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக, திம்பம் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை உலாவுவதை லாரி டிரைவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளர்.இதையடுத்து, வனத்துறையினர் மேற்கொண்டஇரவு நேர ரோந்து பணியில் சிறுத்தை பதுங்கியிருப்பதை உறுதி செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளில் திம்பம் மலைப்பாதையில் உலாவிய 3 பேர் சிறுத்தையால் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தாளவாடி, தலமலை, பெஜலட்டி, கேர்மாளம், ஆசனூர் உள்ளிட்ட 200க்கும் குக்கிராமங்களில் வசிக்கும் கிராமங்களில் மக்கள் பஸ் வசதி குறைவு காரணமாக, இரு சக்கர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்ததுவங்கியுள்ளனர்.

அவர்கள் 24 மணி நேரமும் இரு சக்கக வாகனத்தில் பயணிப்பதால் சிறுத்தை, யானை அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கருதி மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை திம்பம் மலைப்பாதையில் பயணிக்க வாகன ஓட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை தற்போது மேலும் 2 மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு இறங்கி செல்ல வேண்டாம் என்றும் லாரி பழுதாகி நின்றால் ஓட்டுநர்கள் உடனடியாக வனத்துறையினரின் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் சிறுத்தை நடமாடும் பகுதியில் நின்று செல்பி எடுப்பதும் இளைப்பாறுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த, பண்ணாரி வனச்சோதனை சாவடியில், வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியும் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். மாலை 6 மணிக்கு மேல் செல்லும் இரு சக்கர வாகனங்கள் திருப்பி அனுப்பிப்பட்டு வருகிறது.

Similar News