செய்திகள்

கோவிலில் வழிபாடுக்கு அனுமதி மறுப்பு: 250 தலித் குடும்பத்தினர் இஸ்லாம் மதம் மாற முடிவு

Published On 2016-07-26 12:19 IST   |   Update On 2016-07-26 12:19:00 IST
வேதாரண்யம் அருகே கோவில் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் 250 தலித் குடும்பத்தினர் இஸ்லாம் மதம் மாற முடிவு செய்வதாக கலெக்டர் பழனிசாமியிடம் மனு அளித்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த பழங்கள்ளிமேடு ஊராட்சியில் உள்ள தலித் மக்கள் கிராமத் தலைவர் ஆனந்தராசு தலைமையில் மாவட்ட கலெக்டர் பழனிசாமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் சுமார் 450 தலித் குடும்பங்களும், 460 சாதி இந்து குடும்பங்களும் வசித்து வருகிறோம். இங்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாட்டு உரிமையும், மண்டகப்படி உபயம் கேட்டு பல போராட்டம் நடத்தியும், அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எங்களுக்கு எவ்வித உரிமையையும் வழங்கப்படவில்லை.

ஆகவே நாங்கள் இந்து என்று சொல்வதில் வெட்கப்படுகிறோம். எங்களுக்கு உபயதாரர் உரிமை பெற்றுத்தர வேண்டும். அப்படி மனித மாண்பு காக்கப்படவில்லையெனில் சமூக நீதி காக்கப்படாத இந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாமிய மதத்திற்கு பழங்கள்ளிமேட்டில் வசிக்கும் அனைவரும் மாறுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பழங்கள்ளி கிராமத்தை சேர்ந்த 200 தலித் குடும்பத்தினர், நாகம்பள்ளி கிராமத்தை சேர்ந்த 35 தலித் குடும்பத்தினர் உள்பட 250 தலித் குடும்பத்தினர் இஸ்லாம் மதம் மாற போவதாக விடுத்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது.

இஸ்லாம் மதம் மாறுவது தொடர்பாக ரேசன் கார்டுகளில் உள்ள தங்களது பெயர்களை மாற்றி தரக்கோரி அவர்கள் போராட்டமும் நடத்தினர்.

Similar News