செய்திகள்

அறந்தாங்கி அருகே மணல் குவியலில் இருந்து ஐம்பொன் சிலை மீட்பு

Published On 2016-07-25 12:30 IST   |   Update On 2016-07-25 12:30:00 IST
அறந்தாங்கி அருகே மணல் குவியலுக்குள் கிடந்த பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது.

அறந்தாங்கி:

பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வழியாக அகல ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மருதங்குடி பகுதியில் ரெயில் பாதையின் இருபுறமும் தடுப்புசுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. இப்பணிக்காக அழியாநிலை மணல் குவாரியில் இருந்து லாரிகளில் மணல் எடுத்து வரப்பட்டு மருதங்குடி பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

நேற்று பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் தேவையான அளவு மணல் அள்ளும் பணி நடைபெற்றது. திடீரென எந்திரத்தில் ஏதோ தட்டுப்படவே, பொக்லைன் எந்திரத்தின் டிரைவர் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் தங்கபாண்டியன், கார்த்திக்கேயன் ஆகியோர் தட்டுப்பட்ட பொருளை பார்த்தனர். அப்போது ஐம்பொன்னாலான பெருமாள் சிலை ஒன்று மணல் குவியலுக்குள் கிடந்தது தெரியவந்தது. ஒரு அடி உயரத்தில் 5 கிலோ எடை இருந்த அந்த சிலை மிகவும் பழமையானதாக இருந்தது.

இது குறித்து அவர்கள், அப்பகுதி பொதுமக்களிடம் கூறவே, ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை பார்வையிட்டனர். மேலும் அறந்தாங்கி வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் மணிவண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் சென்று சிலையை மீட்டனர். பின்னர் அதனை அறந்தாங்கி கருவூலத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட சிலையின் மதிப்பு பல லட்சம் இருக்கும்.

அந்த சிலை மணல் குவியலுக்குள் எப்படி வந்தது என்று தெரியவில்லை. சிலை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யாராவது போலீசாருக்கு பயந்து அழியாநிலை பெரியாற்றில் ஐம்பொன் சிலையை போட்டு விட்டு சென்றிருக்கலாம். மணல் அள்ளும் போது அதனுடன் சேர்ந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அல்லது ஏதாவது கோவிலில் இருந்து கொண்டு வந்து போடப்பட்டதா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News