செய்திகள்

அரியலூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் வி‌ஷம் கலப்பு: மாணவ-மாணவிகளை கொல்ல சதியா? - போலீசார் தீவிர விசாரணை

Published On 2016-06-25 09:51 IST   |   Update On 2016-06-25 09:51:00 IST
அரியலூர் அருகே பள்ளியின் குடிநீர் தொட்டியில் வி‌ஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் அழகிய மணவாளன் ஊராட்சிக்கு உட்பட்ட மேலராமநல்லூர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து நேற்று மாலை கடும் துர்நாற்றம் வீசியது.

இது குறித்து பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர்களிடம் தெரிவிக்கவே, அவர்கள் பள்ளிக்கு சென்று குடிநீர் தொட்டியை திறந்து பார்த்தனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் வி‌ஷப்பாட்டில் ஒன்று கிடந்தது. அதில் இருந்த வி‌ஷம் தண்ணீரில் கலந்திருப்பதும் தெரிய வந்தது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அங்கு வந்தனர். அவர்கள், தொட்டியில் இருந்த தண்ணீரை உடனடியாக திறந்து வெளியேற்றினர். பின்னர் அந்த குடிநீர் தொட்டி முற்றிலுமாக கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் தூத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பள்ளியின் குடிநீர் தொட்டிக்குள் வி‌ஷம் கலந்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கலந்தனர் என்று தெரியவில்லை. மாணவ, மாணவிகளை கொலை செய்ய நடந்த சதியாக இருக்கலாமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

குடிநீர் தொட்டிக்குள் வி‌ஷம் கலந்திருப்பது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News